புவனேஷ்வர்: ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ‛‛நான் முழு உடல்நலத்துடன் உள்ளேன்,” என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
மேலும், “வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை,”என்றும் அவர் தெரிவித்துள்ளார். “எனது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கவலைப்படுகிறார். அண்மையில், என்னை அவரது நண்பர் என கூறியிருந்தார். அப்படி இருக்கையில், தொலைபேசியில் என்னை அழைத்து எனது உடல்நிலை குறித்து கேட்டு இருக்கலாம்,” என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் நேரம் என்பதால், அனைத்தையும் அரசியல் லாபத்திற்காக செய்கிறார். எனது உடல்நிலை சரியாக உள்ளது. கடந்த மாதம், மாநிலம் முழுவதும் சென்று பிரசாரம் செய்தேன்,” என்றார் அவர்.
தனக்கு ஒரு அரசியல் வாரிசை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட நவீன் பட்நாயக், “எனக்கு பிறகு யார் என்பதை ஒடிசாவில் உள்ள மக்கள் தான் முடிவு செய்வார்கள்,” என வி.கே.பாண்டியன் தான் நவின் பட்நாயக்கின் அடுத்த வாரிசு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றஞ்சாட்டுக்கு நவின் பட்நாயக் முற்றுப்புள்ளி வைத்தார்.

