ஜம்மு: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து, ரீசி மாவட்டத்தின் ஜம்முவில் இருந்து ஷிவ்கோரி புனிதத் தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்து.
பேருந்து ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அக்னூர் நகருக்கருகே டண்டா பகுதியில் உள்ள காளி கோயில் அருகேயுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
வியாழக்கிழமை (மே 30) நண்பகல் 12 மணிக்கு நடந்த இந்த விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாகவும் 40 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அதிகாரி கான் தெரிவித்துள்ளார்.
மோசமான சாலைகள், கண்மூடித்தனமாக வாகனமோட்டுவது, அளவுக்கு அதிகமாக பயணிகளை அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லும் காரணங்களால் இந்தியாவில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த நெடுஞ்சாலையில் இருந்த வளைவைக் கடக்கும்போது ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 40 பயணிகளில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

