சண்டிகர்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதாக அவரது பிரசார மேலாளர்கள் கூறுகின்றனர். இந்திய அரசாங்கத்திற்கு இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
31 வயதான அந்தச் சீக்கியப் போராளியின் பெயர் அம்ரித்பால் சிங். பஞ்சாப் மாநிலத்தில் அவர் போட்டியிடும் தொகுதியான கதூர் சாஹிப்பிலிருந்து கிட்டத்தட்ட 3,000 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அசாமில் இருக்கும் அதிகப் பாதுகாப்பு நிறைந்த சிறையில் அம்ரித்பால் அடைக்கப்பட்டுளார்.
கடந்த ஆண்டு அவரது ஆதரவாளர் ஒருவரை விடுவிக்கக் கோரி, அவரும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் வாள்கள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இக்குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட சிங், கடுமையான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
“ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் மக்கள் தங்கள் முடிவை எடுப்பார்கள்,” என்று சிங்கின் தந்தை டார்செம், 61 தெரிவித்தார்.
பஞ்சாப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

