புதுடெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி கட்சி

2 mins read
e8b9fb7f-0856-4001-9848-33c6f7dbe0bf
புதுடெல்லியில் தண்ணீருக்குப் பற்றாக்குறை நிலவும் நிலையில், தண்ணீர் லாரிக்காக காத்திருக்கும் பொதுமக்கள். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லி மக்களைக் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் அங்குத் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது. தங்கள் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

இமாச்சலப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களை புதுடெல்லிக்கு கூடுதல் நீர் வழங்க வேண்டி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

“டெல்லியில் வெப்பம் 50 டிகிரிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீரின் தேவையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் “எங்களின் நோக்கம் மாநிலத்துக்கு உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என சச்சரவு செய்வது அல்ல; தற்போது கோடை வெப்பம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. தேவை அதிகரித்ததால்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்” என உச்சநீதிமன்றத்தில் அது சமர்ப்பித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அவசர நிலைக்கு ஓர் அவசரத் தீர்வு தேவை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டது.

இமாச்சலப் பிரதேசம் தனது உபரி நீரை புதுடெல்லியுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக ஆம் ஆத்மி அரசு கூறியது. இதற்கு ஹரியானா அரசின் வசதியும் ஒத்துழைப்பும் தேவை. ஆனால் அது தற்போது வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

சோனியா விஹார், பாகீரதி ஆகிய தடுப்பணைகளில் உள்ள நீர் நிலைகள் ​புதுடெல்லிக்குத் தற்போது முக்கிய நீராதாரமாக உள்ளன.

தற்போதுள்ள நிலையில், நீர் வரத்தை அதிகரித்தால் மட்டுமே மக்களுக்கு நீரைத் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் டெல்லி மக்களுக்கு இந்தப் பிரச்சினையில் அரசியல் செய்வதற்கு பதிலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்