புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதே காங்கிரசின் எண்ணம் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் பட்சத்தில் அது ஜனநாயகத்துக்கான முடிவாக அமைந்து விடும் என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் முன்வைக்கும் இக்கருத்தை மக்களும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி தம்மைத் தாமே புகழ்ந்து பேசியதாகவும், காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி மீது அவதூறுகளை அள்ளி வீசியதாகவும் கார்கே கூறினார்.
“கடந்த 15 நாள்களில் மட்டும் காங்கிரஸ் என்ற பெயரை 232 தடவையும் மோடி என்ற பெயரை 758 முறையும் பிரதமர் உச்சரித்துள்ளார். இதே வேளையில் ‘இண்டியா கூட்டணி’ என்று 573 முறை அவர் உச்சரித்துள்ளார்.
“ஆனால் நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவை குறித்து அவர் ஏதும் சொல்லவில்லை. சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில்தான பிரதமர் அதிகம் பேசியுள்ளார்.
“இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர், பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதி நாட்டு மக்கள் மாற்று ஆட்சிக்கான தெளிவான முடிவை வழங்குவார்கள் என உறுதியாக நம்புகிறோம்,” என்றார் கார்கே.
தொடர்புடைய செய்திகள்
நடப்பு மக்களவைத் தேர்தல் நீண்ட காலத்துக்கு நம் நினைவில் நிற்கும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமரும் பாஜக மூத்த தலைவர்களும் மக்களை சமயம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளின் அடிப்படையில் பிரித்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சாடினார்.
“அவற்றைக் கடந்து மக்கள் முக்கிய பிரச்சினைகளை தேர்வு செய்து தீர்வை எதிர்பார்த்தனர். அந்த பிரச்சினைகளின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்குகள் கோரினோம். காங்கிரஸ் கட்சி எப்போதுமே மக்களுடைய பிரச்சினைகளை பற்றிதான் சிந்திக்கும். அவற்றுக்கான தீர்வுகளை நோக்கியே காங்கிரஸார் செயல்படுவர்.
“ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முறை ஆட்சி அமைத்தது போல் மீண்டும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி மத்தியில் அமையும்,” என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் களத்தில் இவர் 100 பேரணிகளில் பங்கேற்றதுடன் 20 முறை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் 50க்கும் மேற்பட்ட நேர்காணல்களையும் வழங்கியுள்ளார் கார்கே.