பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்குகளை எதிர்கொண்ட ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரஜ்வல் ஜெர்மனியின் முனிச் நகரத்திலிருந்து லுஃப்தான்சா விமானத்தில் ஏறியதாக இன்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையிடமிருந்து வியாழக்கிழமை பிற்பகல் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குத் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்தவுடன் கர்நாடக காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள், பெங்களூரு காவல்துறையினர், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஆகியோர் பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலேயே கைது செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.
பிரஜ்வலைக் கைது செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் வாதிடப்பட்டது. 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டிய நிலையில், 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாசக் காணொளிகள் வெளியானதையடுத்து, அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரைக் கைது செய்வதற்காக ஏப்ரல் 28ஆம் தேதி கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
அவர்மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் கோரிக்கையை அடுத்து இம்மாத தொடக்கத்தில் பிரஜ்வலுக்கு இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியது.
தொடர்புடைய செய்திகள்
சிறப்பு புலனாய்வுக் குழுவின் கோரிக்கையை அடுத்து இம்மாத தொடக்கத்தில் பிரஜ்வலுக்கு அனைத்துலக காவல்துறைத் தகவல் கோரிக்கை கடிதம் அனுப்பியது.
ஹாசன் தொகுதியில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரஜ்வல், இந்த வார தொடக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டார். அதில், வெள்ளிக்கிழமை (மே 31) காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு முன் முன்னிலையாவதாக கூறியிருந்தார். அவர் சிறப்பு நீதிமன்றத்தில் முன்பிணைக்காக மே 29ஆம் தேதி மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.

