திருவனந்தபுரம்: காருக்குள் தண்ணீர் நிரப்பி, நீச்சல் குளம் அமைத்து சாகசப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்த கேரளாவின் பிரபல யூடியூபர் சஞ்சு டெக்கி (28 வயது) சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அண்மையில் வெளியான ‘ஆவேஷம்’ என்ற மலையாளப் படத்தில் இதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல் காரில் நீச்சல் குளம் அமைத்து அதில் நண்பர்களுடன் குளிக்கும் காட்சியை யூடியூப்பில் நேரலை செய்ய திட்டமிட்டார் சஞ்சு டெக்கி.
இவரை கேரளாவில் ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.
காரில் நீச்சல் குளம் அமைத்த பின்னர் நண்பர்களுடன் அதில் பயணம் மேற்கொண்டார் சஞ்சு டெக்கி. இந்தப் பயணம் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பானது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது கார் வழியில் திடீரென நின்றது.
அப்போது காருக்குள் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர் கசிந்து கார் இன்ஜினுக்குள் புகுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து விபத்தின்போது காரில் உள்ளவர்களின் உயிர்காக்க கைகொடுக்கும் காற்றுப்பையும் திடீரென வெடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சு டெக்கியும் அவரது நண்பர்களும் காருக்குள் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரை சாலையில் திறந்துவிட, அப்பகுதியில் போக்குவரத்து நிலைகுத்தியது.
நேரலையில் ஒளிபரப்பான காட்சியை லட்சக்கணக்கானோர் பார்த்த நிலையில், போக்குவரத்து காவல்துறைக்கும் புகார்கள் பறந்தன. விரைந்து சென்ற காவலர்கள் கொல்லம் நோக்கிச் சென்ற சஞ்சு டெக்கியின் காரை வழிமறித்து அதைப் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆபத்தாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ அவர் மீது வழக்குப் பதிவானது.
மேலும், சஞ்சு டெக்கியின் ஓட்டுநர் உரிமம், காரின் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.