புதுடெல்லி: தேர்தல் காலத்தில் ஏறக்குறைய ரூ.1,100 கோடி ரொக்கம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் மாதம் 16ஆம் தேதி ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. கடைசி கட்டத் தேர்தல் சனிக்கிழமை (ஜூன் 1) நடைபெற்றது.
தேர்தலின் போது அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், நகை, பரிசுப் பொருட்களை வழங்குவதைத் தடுக்க வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
பணம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், அதிகளவில் பணம், தங்கம் பறிமுதல் குறித்து பறக்கும் படையினர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தன.
கடந்த மே மாதம் 30ஆம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்க நகைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் டெல்லியும் கர்நாடகாவும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. அங்கு ரூ.200 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 150 கோடி ரூபாய் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானாவில் ரூ.100 கோடி அளவு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் காலத்தில் இந்தளவு பணமும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த 2019ஆம் ஆண்டை காட்டிலும் 182 விழுக்காடு கூடுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2019ல் ரூ.390 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.