மும்பை: மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மனோஜ் குமார் என்ற முன்னா ஆயுள் தண்டனை பெற்று, கோலாப்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். அவர் சிறையில் காலை குளிக்கச் சென்றார். அந்நேரம் ஐந்து கைதிகள் அவரைச் சுற்றிவளைத்து தாக்கினர். இதில் முன்னாவின் உடலில் மிகப்பெரிய வெட்டு விழுந்தது. சிறை ஊழியர் ஒருவர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் கைதிகள் அவரையும் தாக்கினர். காயமடைந்த முன்னா உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாவை தாக்கியதாக பப்லு, பிரதிக், ருதுராஜ், செளரப், தீபக் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் பப்லு, பிரதிக், ருதுராஜ் ஆகியோர் மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் கட்டுப்பாடுச் சட்டம் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இருவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட முன்னா மும்பை தொடர் குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துகளை மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் கடற்கரைக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 12 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது.
உச்ச நீதிமன்றம் 10 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. ஒருவர் சிறையில் இறந்துவிட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்டான். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உட்பட சிலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

