தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலித்தன.
திங்கட்கிழமை காலை சந்தை இயங்கத் தொடங்கியதும் பணமழையில் முதலீட்டாளர்கள் ஆனந்தமாக நனைந்தனர். லாபமாகக் கிடைத்த பல லட்சம் கோடி ரூபாய்களை அவர்கள் அள்ளினர்.
மக்களவைத் தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்ததும் கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அந்தக் கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட ஒரே குரலில் ஒலித்தன.
திங்கட்கிழமை (ஜூன் 3) காலை 9.17 மணிக்கு பிஎஸ்இ சென்செக்ஸ் எனப்படும் மும்பை பங்குச் சந்தை சாதனை அளவாக 2,178 புள்ளிகள் உயர்ந்து 76,139ஐத் தொட்டது. இது ஒரே நாளில் பதிவான 2.94 விழுக்காடு ஏற்றம்.
மற்றொரு பங்குச் சந்தையான நிஃப்டி 579 புள்ளிகள் உயர்ந்து 23,109ஐத் தொட்டது. இது 2.57 விழுக்காடு ஏற்றம்.
பின்னர் 10.20 மணியளவில் சென்செக்ஸ் சற்று இறங்கி 76,080 என்று பதிவானாலும் நிஃப்டியின் பாய்ச்சல் தொடர்ந்தது. சந்தை தொடங்கியது முதல் 665.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 23,196.30 என உச்சத்தைத் தொட்டது நிஃப்டி.
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்களின் மனப்போக்கில் உந்துதல் காணப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கேற்ப, நிஃப்டியில் அங்கம் வகிக்கும் எரிசக்தி (Energy), பொதுத் துறை வங்கி (PSU Bank), சொத்துச் சந்தை (Realty) ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றும் 4 முதல் 5 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை செல்வந்தர்களாக்கியது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை அறுவடை செய்யும் என்று வெளியான கருத்துக்கணிப்புகள் ஜூன் மாத பங்குச் சந்தை வலுவாகத் தொடங்க உதவியுள்ளன என்று மேத்தா ஈக்குவிட்டீஸ் பங்கு தரகு நிறுவனத்தின் மூத்த அதிகாரி பிரசாந்த் டாப்சே கூறியுள்ளார்.

