புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டணி 350க்கும் கூடுதலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள சூழலில், தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (ஜூன் 3) பிற்பகலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது.
நாட்டின் தேர்தல் வரலாற்றில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவருடைய சமூக ஊடக தளத்தின் வழியே ஜூன் 2ஆம் தேதி வெளியிட்ட செய்தியொன்றில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன், 150 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வழியே பேசினார் என தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி, அவரிடம் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதுபற்றிய உண்மையான தகவல் மற்றும் விவரங்களையும் கேட்டிருந்தது. இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், எழுந்து நின்று கைதட்டி வாக்காளர்களுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
அவர் கூறும்போது, “நடப்பு ஆண்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இந்தத் தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து இருக்கின்றனர். வாக்குப்பதிவில் 64.20 கோடி வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பெண் வாக்காளர் 31.20 கோடி பேர். அதிக பெண்கள் வாக்களித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
“தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என ஒன்றரை கோடி பேர் பணியில் ஈடுபட்டனர். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்றனர். அதனை வெற்றியடைய செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தத் தேர்தலில், 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட இரண்டரை மடங்கு அதிக வாக்காளர்கள் வாக்கைச் செலுத்தி உள்ளனர். தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டு இருந்தன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் தொடர்பாக முதல்முறையாக 100 சுற்றறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.