தேர்தல் முடிவு கருத்து கணிப்புக்கு நேர் எதிராக இருக்கும்: சோனியா காந்தி

தேர்தல் முடிவு கருத்து கணிப்புக்கு நேர் எதிராக இருக்கும்: சோனியா காந்தி

2 mins read
e420ac90-ddbc-4ef3-a133-98e6bc9f108e
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை பிடிக்க வாய்ப்பே இல்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் அனைத்து நிறுவனங்களும் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளைத் தாண்டாது என இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வந்தார்கள். இதனால்தான் ஜூன் 1-ஆம் தேதி கார்கே வீட்டில் தலைவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது வெற்றி பெறுவோம் என மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, கர்நாடகா துணை முதல்வர் டி. சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துக் கணிப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். கருத்துக் கணிப்பை மீறி 295 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் உன உறுதியாகக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கு எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என மிகவும் நம்புவதாகத் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பாக சோனியா காந்தி கூறுகையில், “நாம் காத்திருக்க வேண்டும். காத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கு முற்றிலும் எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

“இது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்று அழைக்கக்கூடாது. இது மோடி காணொளி கணிப்பு,” என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்