லக்னோ: திருடச் சென்ற வீட்டில் குளிரூட்டியில் சொகுசாக தூங்கி காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது.
தலைநகர் லன்னோவில் இந்திரா நகர் செக்டர் 20 பகுதியில் ஒரு மருத்துவர் வீட்டில் சனிக்கிழமை இரவு கொள்ளையடிக்கச் சென்ற திருடன், வீட்டுக்குள் இருந்த பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருள்களைத் திருடியதாக காசிபூர் காவல்துறையினர் கூறினர்.
திருடிய பொருள்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்த பின்னர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய திருடன், அந்த வீட்டுக்குள் அளவுக்கு அதிகமான வெப்பம் இருந்ததால் குளிரூட்டியை இயக்கினான். பின்னர் சொகுசாக படுத்து உறங்கிவிட்டான்.
மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர், வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிகாரி ஒருவரை அழைத்த அவர், அதிகாரி வந்ததும் இருவருமாக வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது பொருள்கள் சிதறிக் கிடந்தன.
அதனால் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற காவல்துறையினர், வீட்டைச் சோதனையிட்டபோது திருடன் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டனர்.
அவனை உறக்கத்தில் இருந்து எழுப்பி கைது செய்த காவல்துறையினர் அவன் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அந்தத் திருடனின் பெயர் கபில் என்று தெரியவந்தது.

