இம்பால்: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
மணிப்பூரில் சென்ற ஆண்டு நடந்த இனக் கலவரத்தை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். அந்த மாநிலத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.
இந்நிலையில், மணிப்பூரில் உள்-மணிப்பூர், வெளி- மணிப்பூர் என இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19, 26 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வன்முறைகள் எழுந்ததை அடுத்து இரண்டு தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்ட வேளையில், உள்-மணிப்பூர் தொகுதியில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) போட்டியிட்டது.
வெளி-மணிப்பூர் தொகுதியில், நாகா மக்கள் முன்னணி வேட்பாளர் திமோத்திக்கு அது ஆதரவு அளித்தது.
இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உள்-மணிப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அங்கொம்ஜா பிமோல் அகோய்ஜம், பாஜக வேட்பாளரை விட 105,436 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னிலை வகிப்பதாகவும் வெளி-மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆல்ஃபிரட் கங்கம் 72,019 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.