தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு காஷ்மீர்: சிறையிலிருந்தே போட்டி, முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்

1 mins read
435ea50e-55ec-4ab7-90a7-7107a281a5ec
பாராமுல்லா மக்களவைத் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் எஞ்சினியர் ரஷீத் (இடம்), திரு ஒமர் அப்துல்லா. - படங்கள்: இந்திய ஊடகம்

பாராமுல்லா: ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான ‘எஞ்சினியர் ரஷீத்’ என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷே வெற்றி பெற்றுள்ளார்.

இவர், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, 2019ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தமது தோல்வியை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாராமுல்லா தொகுதியில் திரு அப்துல்லாவை 100,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எஞ்சினியர் ரஷீத் தோற்கடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையிலேயே, திரு அப்துல்லா தமது தோல்வியை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.

“தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற எஞ்சினியர் ரஷீத்துக்கு வாழ்த்துகள்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சுயேச்சை வேட்பாளரான ரஷீத் சிறையில் இருந்ததால், அவரது இரண்டு மகன்களும் சில வாரங்களுக்கு முன்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ‘எஞ்சினியர்’ ரஷீத், வடக்கு காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்