இந்தியாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைகிறது. 198 தொகுதிகளை வென்றதுடன் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணியில் இருக்கும் அதிக தொகுதிகளில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்,” என்று திரு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கூட்டணி ஆட்சி என்பது தெளிவான நிலையில், கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளக் கட்சிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலையில் பேச்சு வார்த்தையைத் தொடங்கியது..
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 19ல் தொடங்கி, ஜூன் முதல் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணி 235 இடங்களிலும் ஏனைய கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
கடந்த 2014, 2019 தேர்தலில் பின்னடவைச் சந்தித்த காங்கிரஸ் கூட்டணி இந்த முறை அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பது ராகுல் காந்தியின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, “மக்கள் பாஜகவை தண்டித்துள்ளார்கள்,” என்றார். புதுடெல்லி காங்கிரஸ் தலைமையத்தில் செவ்வாய் மாலை பேசிய ராகுல் காந்தி “மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இந்த நாட்டை நீங்கள் ஆள வேண்டாம், என்று ஒன்றுபட்டு கூறியுள்ளனர்,” என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் 303 தொகுதிகளிலும் 2014ஆம் ஆண்டில் 283 தொகுதிகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, 1984க்குப் பிறகு நிலையற்ற கூட்டணி ஆட்சிக்கு முடிவு கொண்டு வந்த பாஜகவுக்கு இது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தென்மாநிலங்களின் உதவியின்றி மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது சாத்தியமல்ல என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும், பீகாரின் நிதிஷ்குமாரும் தலைமைத்துவத்தை முடிவுசெய்யும் ‘கிங் மேக்கர்’களாக உருவெடுத்துள்ளனர். கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சரவை, பொறுப்புகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் இவர்கள் கை ஓங்கியிருக்கும்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.
வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 960 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 642 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர். 8,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகள் தவிர்த்து, 540 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது.
இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 100 இடங்களில் வென்றுள்ளது. 2014 தேர்தலில் 44 இடங்களிலும், 2019ல் 52 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2019ல் 91 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கூட்டணி இந்த முறை 233 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பது ராகுல் காந்தியின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி இரு தொகுதிகளிலும் அவர் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அவரை எதிர்த்த பாஜக வேட்பாளர்கள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் மிகப் பெரிய அதிர்ச்சி உத்தரப்பிரதேசம். இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளிலும் வெற்றி என பாஜக தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை கருத்துக்கணிப்புகளும் உறுதிப்படுத்தின. ஆனால் மக்கள் தீர்ப்பு நேர்மாறாக இருந்தது. இண்டியா கூட்டணி 42 இடங்களிலும் பாஜக 37 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 2014ல் 71 இடங்களிலும், 2019ல் 76 இடங்களிலும் இங்கு பாஜக வெற்றி பெற்றது.
29 தொகுதிகளுடன் இண்டியா கூட்டணியின் முக்கிய மாநிலமாக மாறியுள்ள மகாராஷ்டிரா மற்றொரு திருப்பம். கடந்த முறை அங்குள்ள 48 தொகுதிகளில் 41 இடங்களை வென்ற பாஜக கூட்டணி, இந்த முறை 18 இடங்களையே பெற்றுள்ளது.
அதேநேரத்தில் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா என இண்டியா கூட்டணியின் உறுதியான கோட்டைகளை அசைத்து முன்னேறியுள்ளது பாஜக.
பிஜு ஜனதா தளத்தின் கோட்டையாக இருந்த ஒடிசாவின் 21 தொகுதிகளில் 19 இடங்களில் வென்று, 24 ஆண்டுகால பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பாஜக. சட்டமன்றத்தையும் கைப்பற்றி, ஆறாவது முறையாக முதல்வராகி, இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமையைப் பெறும் நவீன் பட்நாயக்கின் கனவைக் கலைத்துப் போட்டுள்ளது. இதன்மூலம் ஒடிசாவில் கால் பதிக்கிறது பாஜக.
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2ஆம் தேதி முடிவடைந்ததால், அந்த இரு மாநிலங்களுக்கும் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நாட்டிலேயே தனித்துவம் மிகுந்த, முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்பதை இந்த தேர்தலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன் எப்போதையும்விட தேர்தலில், அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடு தழுவிய அளவில் ஒலித்தது. தேர்தல் ஆணையமும் தேர்தல் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றியது.