விஜயவாடா: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கூட்டணி 160க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு சிறைக்குச் சென்ற 74 வயது சந்திரபாபு நாயுடு தற்போது பிணையில் உள்ளார். வழக்கு விசாரணை நடக்கிறது.
முதல்வராக மாநிலத்தில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில், மத்தியிலும் பதவிகளை அவர் எதிர்பார்க்கிறார்.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது.
ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது.
இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜகவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. கூட்டணி ஆட்சி அமையும் சூழலில் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சில முக்கிய அமைச்சரவை இலாகாகளையும் இருகட்சிகளும் கேட்பதாகக் கூறப்படுகிறது.
எப்படியிருந்தாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதை உறுதிப்படுத்திய சந்திரபாபு நாயுடு, புதுடெல்லியில் புதன்கிழமை (ஜூன் 5) நடைபெறும் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில், கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
“இது மாதிரியான சிறப்பு தேர்தலை பார்த்தது இல்லை. இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்,” என்றார் அவர்.
அம்மாநிலத்தின் 175 மொத்தத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கூட்டணி 55.38% வாக்குகளைப் பெற்றுள்ளது. 45.60% தெலுங்கு தேசம் கட்சிக்கும், 39.37% பேர் ஒய்எஸ்ஆர்சிபிக்கும் சென்றுள்ளது.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள் சுனாமியையே உருவாக்கியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி 151 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களையும் வென்றிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றிருப்பதால், சந்திரபாபுவுக்கு தேசிய அரசியலில் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்கள் மே 13ஆம் தேதி நடைபெற்றன.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.