தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகும் மோடி, 8ஆம் தேதி பதவியேற்பு

2 mins read
5f8bc4e6-03cf-4d12-8f2f-033b1d04a2ef
புதுடெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (ஜூன் 4) தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நரேந்திர மோடி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். 8ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் சாதனையை பிரதமா் மோடி சமன் செய்யவிருக்கிறார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அதிபர் திரெளபதி முர்முவைச் சந்தித்த மோடி, பிரதமர் பதவி விலகல் கடிதத்தையும் 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையையும் புதன்கிழமை (ஜூன் 5) அவரிடம் கொடுத்தார். புதிய அரசு பதவி ஏற்கும் வரை இடைக்காலப் பிரதமராக நீடிக்க அதிபர் விடுத்த கோரிக்கையை மோடி ஏற்றுக்கொண்டார்.

நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி, தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

கடந்த 2014, 2019 தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை, தனது தேசிய ஜனநாயக கூட்டணிக் (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஜூன் 5ஆம் தேதி டெல்லியில் ஒன்றுகூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் மோடியை அந்தக் கூட்டணியின் தலைராகத் தேர்ந்து எடுத்தனர். ஜூன் 7ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

அந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்படுவார் என்றும் அதனைத் தொடர்ந்து, அதிபரைச் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு மோடி உரிமை கோருவார் என்றும் கூறப்படுகிறது.

தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நேப்பாளப் பிரதமர் பிரசந்தா, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே, மொரிசியஸ் பிரதமர் பிரவீந்த்குமார் ஜக்னாத், உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா, இலங்கையின் அதிபர் ரனில் விக்ரமசிங்கே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே முதலானோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “பெரும் தேர்தல் பணிகளை சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவிற்கு பாராட்டுகள். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு நெருக்கமான பங்காளித்துவம் தொடரும்,” என்று வாழ்த்தியுள்ளார்.

வாழ்த்து தெரிவித்த, அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்போகும் மோடியின் வெற்றியை வரலாற்றுச் சாதனை என வர்ணித்தார்.

சிங்கப்பூர்-இந்தியாவுக்கு இடையேயான பங்காளித்துவ உறவை வலுப்படுத்துவதில் திரு மோடியுடன் தான் பணியாற்ற விரும்புவதாக தமது எக்ஸ் பதிவில் திரு வோங் தெரிவித்தார். அத்துடன், சிங்கப்பூர்-இந்தியாவுக்கு இடையிலான அரசதந்திர உறவின் 50 ஆண்டு நிறைவை 2025ஆம் ஆண்டு கொண்டாடுவதை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்