ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் மாதவி லதாவை வென்ற ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்தியாவின் முஸ்லிம் மக்களின் சக்திவாய்ந்த குரலாக உருவெடுத்துள்ளார்.
அவரது தலைமையின் கீழ், மகாராஷ்டிரம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏஐஎம்ஐஎம் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுள்ளது.
வழக்குரைஞரான 55 வயது ஒவைசி, உருது, ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.
ஏஐஎம்ஐஎம் ‘போராளிகளின்’ கட்சி என்றும் (ஹைதராபாத்தில் முந்தைய நிஜாம் ஆட்சியைப் பாதுகாத்த ஒரு தனியார் போராளிகள்) என்றும், பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் மீது அவர் செல்வாக்கு செலுத்துவதாகவும் பாஜக தலைவர்கள் அடிக்கடி குற்றம் சாட்டும்போது அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ஒவைசி தவறியதில்லை.
1994, 1999 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற ஒவைசி, 2004, 2009, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று எம்பி ஆனார்.
ஆறு முறை எம்.பி, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள அவரது தந்தையும் புகழ்பெற்ற முஸ்லிம் தலைவருமான சுல்தான் சலாவுதீன் ஒவைசியின் மறைவுக்குப் பிறகு 2008ல் ஏஐஎம்ஐஎம் தலைவரானார் ஒவைசி.
நாட்டில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரின் நலனைக் கவனிக்க சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரத்யேக அமைச்சகத்தை அமைக்க மத்திய அரசை வற்புறுத்துவதில் அசாதுதீன் ஒவைசி முக்கியப் பங்காற்றியுள்ளார்.