போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் சங்கர்லால்வானி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அக்சய் காந்தி பாம் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் திடீரென பாஜகவுக்குத் தாவினார்.
அதனால் அந்தத் தொகுதியில் எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து, இந்தூர் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்காக வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள ‘நோட்டா’ பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்துமாறு காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்தது.
ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டபோது பாஜக வேட்பாளர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் நோட்டாவுக்கு 2,18, 674 வாக்குகள் கிடைத்தன.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் சோலங்கி உட்பட 13 வேட்பாளர்கள் நோட்டாவுக்குக் கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் குறைவாகவே பெற்றனர்.
நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இவ்வளவு அதிகமான வாக்குகள் விழுந்தது இல்லை.
தொடர்புடைய செய்திகள்
முதன்முதலாக நோட்டாவுக்கு 2.18 லட்சம் வாக்குகள் விழுந்த வரலாறு இந்தூரில் படைக்கப்பட்டு உள்ளது.
நோட்டாவுடன் ஒப்பிடும்போது பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10 லட்சத்து 80 ஆயிரத்து 77 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

