புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பெரும் வெற்றி பெற்றதுடன் இண்டியா கூட்டணியின் வெற்றிக்கும் பாடுபட்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு அவரது தங்கை பிரியங்கா உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
“உனது சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா, உண்மைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.
எதற்கும் துணிந்தவர் என்று ராகுலை புகழ்ந்திருக்கும் பிரியங்கா, அன்பு, உண்மை, கனிவுடன் அவர் போராடியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
“எப்போதும் போலவே நீ தைரியமாக இரு, மற்றவர்கள் என்ன சொன்னாலும், நீ இப்போது செய்வதையே தொடரவேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் பின்வாங்கக்கூடாது, உண்மைக்கான போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடக்கூடாது. உன்னை கோபமும், விரக்தியும் ஆட்கொள்ள அனுமதிக்கக்கூடாது, ஒருவேளை பலரும் இதனையே உனக்கு பரிசாகக் கொடுத்தாலும்கூட, இதுவரை பார்க்காதவர்களும் உன்னை இனி பார்ப்பார்கள், நீ எதற்கும் துணிந்த வீரர்,” என்று பிரியங்கா, ராகுலை புகழ்ந்துள்ளார்.
ராகுல், ரேபரேலி தொகுதியில் 6,87,649 வாக்குகளைப் பெற்று 3.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். வயநாடு தொகுதியில் 6,47,445 வாக்குகளைப் பெற்று 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தாா்.

