தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குஜராத்தில் பாஜகவின் கனவை தகர்த்தெறிந்த ஜெனிபென் தாகூர்

1 mins read
97716a78-372b-4719-a49c-4f22a79553cc
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுடன் ஜெனிபென் தாகூர். - படம்: ஊடகம்

காந்திநகர்: மேற்கிந்திய மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றியைச் சுவைத்துள்ளது. இங்குள்ள பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் புதிய வெற்றிக் கணக்கைப் பதிவு செய்துள்ளார் வேட்பாளர் ஜெனிபென் தாகூர்.

இவர், பாஜக வேட்பாளர் டாக்டர் ரேகாபென் சௌத்ரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

“எனது வெற்றி குஜராத்தின் ஒட்டுமொத்த தொகுதிக்கான வெற்றி,” என்று கூறியிருக்கும் ஜெனிபென்னுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வென்றதில்லை. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் கால் பதித்துள்ளது.

இங்குள்ள பனஸ்கந்தா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிடவும் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் ஜெனிபென் தாகூர்.

இதன்மூலம் பாஜகவின் கனவை அவர் தகர்த்தெறிந்துள்ளார்.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவின் இரும்புக்கோட்டையாக இருந்தவை. கடந்த 2019ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 3.68 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார்.

ஆனால், அந்த வரலாற்றை எல்லாம் தனது புதிய கணக்கால் மாற்றி எழுதியுள்ளார் இரு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெனிபென்.

குறிப்புச் சொற்கள்