புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி என இரு பெரும் தேசிய கட்சிகள் எதிரெதிராகக் களம் கண்டன.
இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை கடந்த 4ஆம் தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக உள்ளது. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.
இதனை தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும் பணியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இறங்கியது. அதிபரிடம் பிரதமர் மோடி, பதவி விலகல் கடிதம் வழங்கினார். அதனை அடுத்து 17வது மக்களவை கலைக்கப்பட்டது.
பெரும்பான்மையை பெற பா.ஜ.க. தவறிய நிலையில், நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் மத்தியில் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் தலைமையிலான கட்சிகளின் ஆதரவு தேவையாக உள்ளது. அவர்கள், கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவைத் தெரிவித்து உள்ளனர்.
எனினும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதன்படி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நீர்வளத் துறை போன்றவற்றை தரும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதேபோன்று, பீகார் முதல் அமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். 3 முழு அமைச்சர்கள் மற்றும் 2 இணை அமைச்சர்கள் என 5 மத்திய அமைச்சர் பதவிகள் வேண்டும் என்றும் நிதீஷ் விரும்புகிறார்.
இதேபோன்று, 2 எம்.பி.க்களை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளமும் அமைச்சரவையில் இடம் கேட்டு பா.ஜ.க.வை வலியுறுத்தி வருகிறது. அக்கட்சி வேளாண் துறை வேண்டும் எனக் கேட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கூட்டணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனான, சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தியும் நிபந்தனை விதித்துள்ளது என கூறப்படுகிறது. அக்கட்சி, பீகாரில் 5 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.
இதனால், பா.ஜ.க. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு முன்பே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக இதுபோன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.