புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறிய பாரதிய ஜனதா கட்சி, கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்கத் தயாராகி வருகிறது.
வரும் ஞாயிறுற்றுக் கிழமை (ஜூன் 9) பிரதமர் மோடி பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக சனிக்கிழமை (ஜூன் 8) அவர் பதவியேற்பார் என சொல்லப்பட்டது.
பிரதமர் பதவியேற்புக்கு முன்பு மோடி தமது பதவியிலிருந்து விலகினார்.
சென்ற புதன்கிழமை அதிபர் திரெளபதி முர்முவைச் சந்தித்து அவரிடம், பதவி விலகல் கடிதத்தையும் 17வது மக்களவையைக் கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையையும் திரு மோடி வழங்கினார்.
இதனை ஏற்றுக் கொண்ட அதிபர், புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்காலப் பிரதமராக நீடிக்க அவரிடம் கேட்டுக் கொண்டார்.
மற்றொரு நிலவரத்தில் ஆந்திரா சட்டசபை தேர்தலில் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்ற தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பதால் சந்திரபாபு நாயுடு வரும் புதன்கிழமை (ஜூன் 12) பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
திரு மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்க நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் தலைமையிலான கட்சிகளின் ஆதரவு தேவையாக உள்ளது. அவர்கள், கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவைத் தெரிவித்து உள்ளனர்.
எனினும், இரு கட்சிகளும் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதன்படி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நீர்வளத் துறை போன்றவற்றை தரும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதேபோன்று, பீகார் முதல் அமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், பீகாருக்கு சிறப்புத் தகுதி, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். மூன்று முழு அமைச்சர்கள் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் என ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் நிதிஷ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேபோன்று, இரண்டே இரண்டு எம்.பி.க்களை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளமும் அமைச்சரவையில் இடம் கேட்டு பா.ஜ.க.வை வலியுறுத்தி வருகிறது. அக்கட்சி வேளாண் துறை வேண்டும் எனக் கேட்டுள்ளது.
கூட்டணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகனான, சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தியும் நிபந்தனை விதித்துள்ளது என கூறப்படுகிறது. அக்கட்சி, பீகாரில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இதனால், பா.ஜ.க., மத்தியில் ஆட்சியமைப்பதற்கு முன்பே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில் 240 தொகுதிகளை அக்கட்சி வென்றுள்ளது.

