தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி தேர்வு

2 mins read
282d780b-7099-498f-a146-5d92ea1bf0d6
மோடியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பளித்தனர். மோடியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார்.

கூட்டத்தின்போது பேசிய பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், பாஜக நாடாளுமன்றக் குழு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடியின் பெயரை முன்மொழிந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடியைத் தேர்வு செய்யும் தீர்மானத்தை அமித்ஷா வழிமொழிந்தார்.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர். திரு சந்திரபாபு நாயுடு பேசியபோது, “கடந்த மூன்று மாதங்களாக பிரதமர் மோடி ஓய்வின்றி இரவு, பகலாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மோடி மற்றும் அமித்ஷாவின் பிரசாரம் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய அதிகாரம் மிக்க மையமாக இந்தியா மாறி இருக்கிறது.

“இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரைப் பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு இது மிகச்சிறந்த தருணம், மிகச்சிறந்த வாய்ப்பு. இந்தியா மட்டும்தான் கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மோடி உருவாக்கப்போகிறார். தேச நலன் மற்றும் மாநிலங்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை சமன்படுத்தப்பட வேண்டும்,” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்