Byline: ரோனோஜாய் சென்
ஆறுவாரமாக நடந்து முடிந்த இந்தியத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானபோது, வெகு சிலரே பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை எண்ணிக்கையான 272 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறைவாக அக்கட்சி பெறும் என அறுதியிட்டு கூறியிருப்பர். அதற்கேற்றாற்போல் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நல்ல பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றே கணித்திருந்தன.
ஆனால், முடிவுகள் அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கியதோடு அல்லாமல், பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என்றும் அதன் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி வாகை சூடும் என்ற கூற்றைக் கந்தல் கோலமாக்கின.
இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது பாரதிய ஜனதா கட்சி, 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெற்றதை விட 63 இடங்கள் குறைவாக, 240 இடங்களையே பெற்றது. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் 543 இடங்களில் 293 இடங்கள் கிடைத்தன.
இந்நிலையில், எதிர்த்தரப்பான இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சிக் கூட்டணி (இண்டியா) 232 இடங்களைக் கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் கட்சி, 2019ஆம் ஆண்டு தான் வெற்றி பெற்ற இடங்களைவிட, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக 99 இடங்களில் வெற்றி பெற்றது.
ஜவஹர்லால் நேருக்குப் பின் மூன்று முறை தொடர்ந்து பிரதமராக திரு நரேந்திர மோடி பதவியில் அமரப்போகிறார் என்றாலும் அவருடைய மதிப்பு சற்றே குறைந்து முதல் முறையாக தெலுங்கு தேசக் கட்சி, ஐக்கிய ஜனதா தளக் கட்சி ஆகியவை அடங்கிய கூட்டணிக்குத் தலைமை ஏற்று பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
இதற்கு முந்தைய இரு தேர்தல்களிலும் வாக்காளர்களிடையே மோடிக்கு இருந்த ஈர்ப்புத்தன்மை குறைந்தது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் மக்களைக் கவரக்கூடிய பெருந் திட்டம் இல்லாதது, ராமர் கோவில் நிர்மாணம் எதிர்பார்த்த அளவு வாக்குகளை பெற்றுத் தராதது, வேலையின்மை, எதிர்த்தரப்பு இண்டியா கூட்டணியின் முனைப்பான பிரசாரம் என பல காரணங்கள் கண்முன் தெரிகின்றன.
தேர்தல் முடிவு இவ்வாறு அமைந்ததற்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய காரணங்களைத் தேட வேண்டுமானால் நாடாளுமன்றத்திற்கு அதிக அளவில் உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பும் சில முக்கிய மாநிலங்களை நாம் கவனிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இதில் முதல் படியாக, திரு மோடி நிர்ணயித்திருந்த இலக்கை எட்டுவது கிட்டத்தட்ட முடியாத ஒன்று எனப் பலர் சரியாகவே சுட்டினர்.
அத்துடன், பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு இந்தி பேசும் மாநிலங்களில் குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு குறையவில்லை என்றும் பலர் கூறினர். ஆனால், 80 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதுதான் நடந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உத்தரப் பிரதேசத்தில் 62 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், இந்தத் தேர்தலில் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அந்த எண்ணிக்கை சரிந்து 35 ஆனது. அது மட்டுமல்ல அதன் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி வென்ற இடங்கள் ஐந்திலிருந்து 2024ஆம் ஆண்டில் 37ஆக உயர்ந்தது.
அடுத்து மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 43 இடங்களைக் கைப்பற்றின. அண்மைய தேர்தலில் அங்கு சிவ சேனை கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றில் ஏற்பட்ட பிளவு , பிளவில் இரண்டுபட்ட அந்தக் கட்சிப் பிரிவுகள் ஒன்றுக்கு ஒன்று எதிர்த்துப் போட்டியிடும் நிலை ஆகியவை பாரதிய ஜனதாவுக்கு கடுமையான போட்டியாக இருந்தது எதிர்பார்த்த ஒன்றுதான்.
எதிர்பார்த்தபடியே பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளான சிவ சேனை, தேசியவாத காங்கிரஸ் பிரிவுகளும் மொத்தம் 18 இடங்களிலேயே வெற்றி பெற்றன. இதில் பாரதிய ஜனதாவுக்கு என்று தனியாக 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனைப் பிரிவு, சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகியவை 29 இடங்களை அள்ளின.
இந்த இழப்புகளை ஈடு செய்ய பாரதிய ஜனதா கட்சி வடக்கு, மேற்கு இந்தியாவை நம்பியிருந்தது. ஆனால், நடந்தது என்னவோ அது எதிர்பார்க்காத ஒன்றாக, அதிக இடங்களை கிழக்கிலும், தென் இந்தியாவிலும் வெல்லும் கனவும் பலிக்கவில்லை.
ஒடிசாவில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி அம்மாநிலத்திலுள்ள 21 இடங்களில் 20 கைப்பற்றியது. அத்துடன், அங்கு ஒரே சமயத்தில் நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் அது மிகப் பெரிய பெரும்பான்மையைப் பெற்றது.
இது இப்படியிருக்க, மேற்கு வங்காள மாநிலத்தில் திரு மோடி பல பிரசாரப் பேரணிகளில் உரையாற்றினாலும் அவை எடுபடவில்லை. 2019ஆம் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களில் வென்ற நிலையில், இம்முறை அது 12 இடங்களாகக் குறைந்தது. இதற்கு மாறாக, மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் தனது வெற்றி எண்ணிக்கையை 29ஆக உயர்த்திக் காட்டியது.
நாடாளுமன்றக் கீழவையில் பெரும்பான்மை பெற தென் இந்தியாவே மிகுந்த நம்பிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சில குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தவிர பாரதிய ஜனதாவுக்கு எதிர்பார்த்தது கைகூடவில்லை.
2019ஆம் ஆண்டுத் தேர்தலில் கிடைத்த அதே எண்ணிக்கையிலான இடங்களே அதற்குக் கிடைத்தது. இதில் பெருமளவாக கர்நாடகாவில் 17 இடங்களும் தெலுங்கானாவில் 8 இடங்களும் கிடைத்தன.
ஆந்திரப் பிரேதசத்தைப் பொறுத்தவரை அங்கு தெலுங்கு தேசக் கட்சியுடன் களமிறங்கிய பாரதிய ஜனதா கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்தன.
இந்தத் தேர்தலில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று கேரளாவின் திரிச்சூரில் அது வென்று அம்மாநிலத்தில் அது தனது எழுச்சியைப் பறைசாற்றியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்கு பாரதிய ஜனதா கட்சி முனைப்புடன் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் அது தனது வாக்கு வங்கியை 11 விழுக்காட்டுக்கு அதிகரிக்க முடிந்ததே தவிர ஒரு இடத்தில்கூட வெல்ல முடியவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தேர்தல் முடிவு மோடிக்கு குறைந்த அளவிலான ஆதரவைத் தந்துள்ளது. இதனால், அவர் கூட்டணிக் கட்சிகளின் தயவில் இயங்க வேண்டியிருக்கும்.
எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டால், குறிப்பாக காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, முடிவுகள் ஓர் எழுச்சியை கோடி காட்டுகிறது. இந்த எழுச்சியை அந்தக் கட்சி முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
வெளிநாட்டுக் கொள்கை, பொருளியல் ஆகியவற்றில் தற்போதைய நிலையே தொடரும். இதில் கூட்டணிக் கட்சிகளின் தாக்கம் அதிகம் இராது.
இந்தக் கட்டுரையை எழுதியவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுக் கழகத்தின் அரசியல், சமுதாயம், ஆளுமைப் பிரிவில் மூத்த ஆய்வுக் கல்வியாளரும் ஆய்வுக்கு தலைமை ஏற்பவருமாவார்.

