புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார் அதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். ஞாயிறு இரவு 7.15மணி அளவில் நடைபெறும் விழாவில், மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி, டெல்லியில் பல அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய வீரர்கள், மின்னல் படை வீரர்கள், ஆயுதப் படை வீரர்கள் என 2,500க்கு மேற்பட்டோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழா நடக்கும் பகுதியைச் சுற்றிலும் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேப்பாளம், பங்ளாதேஷ், மொரீஷியஸ், செசல்ஸ் தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்தியப் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பதை அமெரிக்காவில் உள்ள 22 நகரங்களில் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக பாஜக-அமெரிக்காவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் மூத்த தலைவர் அடபா பிரசாத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க், ஜெர்சி சிட்டி, வாஷிங்டன் டிசி, பாஸ்டன், தம்பா, அட்லாண்டா, ஹூஸ்டன், டல்லாஸ், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட 22 நகரங்களில் மூன்று நாள்களுக்கு வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

