மும்பை: மும்பை போவை பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பிரிஹான் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆக்கிரமிப்புக்கு எதிராக எடுத்த அதிரடி நடவடிக்கையின்போது அதிகாரிகள் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தியதாக 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு 57 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
அந்தத் தாக்குதலில் 15 காவல்துறை அதிகாரிகள், ஐந்து கட்டுமானப் பொறியாளர்கள், ஐந்து தொழிலாளர்கள் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கூறிய அதிகாரி ஒருவர், போவைகோன் மற்றும் மௌஜி திரான்டாஜ் ஆகிய சிற்றூர்களில் தனியாருக்குச் சொந்தமான மனையில் கிட்டத்தட்ட 400 குடிசைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம் மும்பை மாநகராட்சியை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் குடிசைகள் தற்காலிகக் குடிசைகள் என்று கூறிவரும் நிலையில், அங்கு வசித்து வருபவர்கள், தாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக இதே பகுதியில்தான் வாழ்ந்து வருகிறோம் என்றும் அதனால் இடத்தைக் காலி செய்ய முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.