இடுக்கியில் பள்ளி மாணவர்களுக்காகப் பாலம் கட்ட ஒரு கிராமமே ஒன்றுசேர்ந்தது

இடுக்கியில் பள்ளி மாணவர்களுக்காகப் பாலம் கட்ட ஒரு கிராமமே ஒன்றுசேர்ந்தது

2 mins read
3671bc5b-e47f-4281-b445-06af5c9a41cc
ரூ.1.25 லட்சம் செலவில் பாலம் கட்டப்பட்டது. தனது சொந்த செலவில் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கி பாலத்தைக் கட்டிக்கொடுத்த நஜீப் (இடது). - படம்: இந்திய ஊடகம்

இடுக்கி: கேரள மாநிலத்தின் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், புள்ளகாய் ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்த பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் நிதி திரட்டி உதவியுள்ளனர்.

குடியிருப்பாளர்களில் ஒருவரான கே.ஈ. நஜீப், 48, என்பவரைக் கிராம மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.

‘வெல்டிங்’ பட்டறையை நடத்துவதுடன் கட்டடம் கட்டிக் கொடுப்பவராகப் பணிபுரிந்து வரும் இவரை கொக்கையார் பகுதியில் வசிக்கும் மக்கள் ‘ஹீரோ’ எனப் பாராட்டுகின்றனர்.

1.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் கட்டுமானப் பணிக்கான ஊழியர்களின் சம்பளத் தொகையைப் பெறாமல் கட்டிக் கொடுத்துள்ளார் நஜீப்.

ஜூன் 3ஆம் தேதி பள்ளி திறக்கப்படும்போது இரும்பினால் ஆன பாலத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற யோசனையுடன் உள்ளூர்வாசிகளையும் பஞ்சாயத்தையும் அணுகினார் நஜீப்.

இதையடுத்து, கொக்கையார், கூட்டிக்கால் போன்ற ஊராட்சிகள், சமூக, கலாச்சார அமைப்புகள், சமய அமைப்புகள் ஆதரவுடன் மே 23ஆம் தேதி பாலம் கட்டும் பணி தொடங்கியது.

பள்ளி திறக்கும் முன் பாலத்தைக் கட்டி முடித்துவிட திட்டமிட்டார் நஜிப். 26.5 மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட பாலத்தின் பணியை நான்கு உதவியாளர்களுடன் 9 நாள்களில் இரவு பகல் பாராது கட்டி முடித்தார்.

தூண்கள் இல்லாத பாலத்தின் திறப்பு விழா ஜூன் 3ஆம் தேதி நடந்த நிலையில், கொக்கையார் ஊராட்சிக்குட்பட்ட நான்கு வார்டுகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பாலம் பேருதவி புரிகிறது.

இந்தப் பாலத்தைத் தவிர, நஜீப் கட்டிய பல கட்டமைப்புகளும் இப்பகுதியில் உள்ளன. கொக்கையாறு பாலம் வெள்ளத்தில் இடிந்தபோது மீண்டும் கட்டப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இன்றும் செல்கின்றன.

இரண்டு ஊராட்சிகளில் ஆறு தொங்கு பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்