ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் குறைந்தது ஒன்பது இந்து யாத்திரிகர்கள் மாண்டதாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 9ம் தேதியன்று இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி பதவி ஏற்றபோது தாக்குதல் குறித்து தகவல்கள் வெளியாகின.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு வலுவாக இல்லை என்பதை இத்தாக்குதல் காட்டுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“பயங்கரவாதிகள் பேருந்தைச் சுற்றி வளைத்தனர். அதை நோக்கி அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது,” என்று ஜம்மு காவல்துறை உயர் அதிகாரி மொஹித்தா ஷர்மா தெரிவித்தார்.
காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது
இந்நிலையில் உயிர் பிழைத்த ஒருவர் இறந்து போனது போல் நடித்ததாக தெரிவித்துள்ளார். “பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த பிறகும் பயங்கரவாதிகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து சில நிமிடங்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் நாங்கள் அமைதியாக இருந்தோம். உயிரிழந்தது போல் நடித்தோம். அதன் பின்னர் தான் எங்களை மீட்புப் படையினர் மீட்டனர்,” என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தாக்குதல் நடந்தபோது பக்தர்களை காக்க பேருந்து ஓட்டுநர் தீரத்துடன் போராடியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
துப்பாக்கிக் குண்டுகளால் தாம் காயப்பட்டிருந்தாலும் பேருந்தை பள்ளத்துக்குள் கவிழாமல் கொண்டு செல்ல ஓட்டுநர் கடைசிவரை தீரத்துடன் போராடியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநர் உயிரிழந்த பிறகே, பேருந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்பட்டது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

