மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

1 mins read
7d218d35-e3ad-4720-96b6-3a90c7c4a4f3
சாலையோரம் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

இம்பால்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ஜூன் 10ஆம் தேதி (திங்கட்கிழமை) ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டார்.அதற்காக அப்பகுதியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முதல்வர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். மேலும் முதல்வரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவரது தனி பாதுகாப்பு குழுவினர் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் பகுதிக்குச் சென்றனர்.

பாதுகாப்பு குழுவினர் காங்போப்கி மாவட்டம் கே.சினாம் கிராமம் அருகே சென்றபோது, சாலையோரம் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

அசாம் எல்லையோரம் அமைந்துள்ள காங்போப்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குக்கி அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள நிலைமை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி பாதுகாப்பு ஆலோசகரிடம் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கேட்டுள்ளார்.

ஜிரிபாம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் குக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் டி.ஜி.பி.க்கு முதல்வர் அலுவலகம் பலமுறை எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்