திருவனந்தபுரம்: “கேரள மக்களின் பிரதிநிதியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய ஒன்று” என்று மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜூன் 9ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்தது.
இதில் கேரள மாநிலத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் வகையில் கேரளாவின் முதல் பாஜக எம்பியாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மலையாள நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்.
எனினும், பதவியேற்ற சில மணிநேரங்களில் மலையாள ஊடகங்களில் சுரேஷ் கோபி தனது படங்களில் நடிக்க வேண்டும் என்பதால், விரைவில் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பதவியேற்ற அன்றே சுரேஷ் கோபிக்கு அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என வெளியானத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது அவர், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக வெளியான தகவல் தவறானது. இது முற்றிலும் தவறானது. பிரதமர் மோடி தலைமையில், கேரளா வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைய உழைப்போம்” என்று சுரேஷ் கோபி சமூக ஊடகம் வழி விளக்கம் தெரிவித்துள்ளார்.

