டெல்லி -ஹரியானா தலைவர்கள் இடையே பூசல்

டெல்லி -ஹரியானா தலைவர்கள் இடையே பூசல்

1 mins read
0016b4a4-2edf-4c78-84bc-597771269a44
இந்தியத் தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் டெல்லி அமைச்சர் அதிஷியும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜூன் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு அதிஷி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் யமுனை ஆற்றில் இருந்து முனாக் கால்வாய் வழியாக 1,050 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என கோரியிருந்தார்.

முன்னதாக, தங்களுக்கான நீரை ஹரியானா மாநில அரசு வழங்காதது தான் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை அதிஷி வைத்திருந்தார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஆளுநர் வி.கே.சாக்சேனாவை அதிஷி சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நயாப் சிங் சைனி, “பொய் பேசுவது ஆம் ஆத்மியின் ரத்தத்தில் உள்ளது. அதை வைத்து தான் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்,” என குற்றஞ்‌சாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் டெல்லி அரசாங்கம் ஹரியானா, இமாச்சல் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் கூடுதல் நீரைத் திறக்க வேண்டுமென கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லிக்கு உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல் பிரதேச அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி குடிநீர் வாரிய தரவுகள் ஹரியானா கூடுதல் நீரை திறந்துள்ளதாக தெரிவிக்கிறது என்றார்.

குறிப்புச் சொற்கள்