ஆந்திரா: ஜனசேனா சட்டமன்றக் குழுத் தலைவராக பவன் கல்யாண் தேர்வு

ஆந்திரா: ஜனசேனா சட்டமன்றக் குழுத் தலைவராக பவன் கல்யாண் தேர்வு

படம்: ஊடகம்

11 Jun 2024 - 8:54 pm

2 mins read

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில், ஜனசேனா சட்டமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஜனசேனா கட்சியின் சட்டமன்றத் தலைவராக பவன் கல்யாண் பெயரை மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததால், ஜனசேனா சட்டமன்றக் கட்சித் தலைவராக பவன் கல்யாண் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணி 175 சட்டமன்றத் தொகுதிகளில் 164 தொகுதிகளையும் 25 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளையும் வென்றுள்ளது. அதையடுத்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

தேர்தல் வெற்றியில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்கட்சி 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராகத் தேர்வுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பவன் கல்யாண் மாநில அமைச்சரவையில் தனது ஜனசேனா கட்சிக்கு ஐந்து அமைச்சர் பதவிகள் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி தகவல் தொழில்நுட்பப் பூங்கா திடலில் 14 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான அரங்கில் 12.6.2024ஆம் தேதி சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், நடிகர்கள், பிரமுகர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்