அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயவாடா புறநகர் பகுதியில் கன்னாவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்பப் பூங்கா திடலில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து, நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களில் 17 பேர் புதியவர்கள். பவன் கல்யாண் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன.
21 இடங்களில் வெற்றிபெற்ற ஜன சேனா கட்சியைச் சேர்ந்த மூவரும் 8 இடங்களைக் கைப்பற்றிய பாஜகவைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணை அதிபர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற பின் அவரை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர் மோடி.
நடிகர்கள் ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, ராம் சரண், முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது. பாஜக, ஜன சேவா போன்ற கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கூட்டணி சார்பில் சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவி ஏற்றிருப்பது இது இரண்டாவது முறை.
ஸ்டாலின் வாழ்த்து
முதல்வராகப் பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆந்திர மாநில முதல்வராக 4வது முறையாக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமையில் மாநிலம் செழிப்பும் நலனும் அடையட்டும். ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக இரு மாநிலங்கள் இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறோம்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.

