புவனேஸ்வர்: ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக மோகன் மாஜி பதவி ஏற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒடிசா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் மாஜி பதவியேற்பு விழா புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் நடைபெற்றது. இதில் மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு கே.வி. சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்-கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். ஒடிசா பழங்குடியினரின் முக்கிய முகமான மோகன் சரண் மாஜி, 4 முறை ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

