புதுடெல்லி: சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகளில் போட்டியிட்டு 135 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்று வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது. அதையடுத்து நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு, முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத் தொழிலான ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு இரண்டே வாரத்தில் உச்சத்தைத் தொட்டது.
அந்த நிறுவனத்தில் சந்திரபாபுவுக்கு 35.37 விழுக்காடு பங்குகளும் அவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு 34.7 விழுக்காடு பங்குகளும் உள்ளன. மேலும் மகன் லோகேஷுக்கு 10.82 விழுக்காடு பங்கும் மருமகள் பிராமணிக்கு 0.46 விழுக்காடு பங்குகளும், பேரன் தேவன்ஷுக்கு 0.06 விழுக்காடு பங்குகளும் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வெற்றி எதிரொலியால் சந்திரபாபு நாயுடுவின் ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததைத் தொடர்ந்து அவருடைய பேரன் தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3ஆம் தேதி ரூ.2.4 கோடியாக இருந்த நிலையில் அது ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் தேவன்ஷுக்கு பங்குச் சந்தையின் மூலமாக ரூ.1.7 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு மும்பைப் பங்குச் சந்தையில் 52 வாரத்தில் இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ.727.9-ஐ எட்டியதால் சந்திரபாபு நாயுடு குடும்பம் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

