பெமா காண்டு அருணாச்சலப் பிரதேச முதல்வரானார்

பெமா காண்டு அருணாச்சலப் பிரதேச முதல்வரானார்

1 mins read
1051273f-7f7c-47a0-83ec-9100a5a39f9a
அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பெமா காண்டு, அம்மாநிலத்தின் ஆளுநர் கைவால்யா திரிவிக்ரம் பாநாய்க்கை சந்தித்தார். - படம்: ஐஏஎன்ஸ்

இடாநகர்: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பெமா காண்டு வெற்றிபெற்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அவர்களில் முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர்.

ஜூன் 2ஆம் சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், தேசிய மக்கள் கட்சி (என்பிஇபி) 5 இடங்களும், சுயேச்சை ஓரிடமும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஓரிடமும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) 2 இடங்களும், இந்திய தேசிய காங்கிரஸ் ஓரிடமும் பெற்றன.

பதவியேற்றதும், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் காண்டு, “அருணாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றுவதே தனது அரசாங்கத்தின் தலையாஇலக்கு என்று உறுதியளித்தார்.

ஏனெனில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணம், மத்திய அரசு மேற்கொண்ட பல மக்கள் நலன் திட்டங்களே என்றார்.

மக்களின் நலன், மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிப்படி அரசாங்கம் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றும் என்று கூறினார்.

அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் 100 நாட்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் முதலமைச்சர் காண்டு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்