தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடக அமைச்சர்: எடியூரப்பா போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்படலாம்

2 mins read
80be109b-0fcb-4884-abe7-9d59f2aaf167
கல்வி உதவி கேட்டுவந்த 17 வயதுச் சிறுமியைப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் எடியூரப்பா போக்சோ சட்டத்தின் கீழ் செய்யப்படலாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான 81 வயது எடியூரப்பா, 17 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் புலனாய்வுத்துறை மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது.

எடியூரப்பா மீது காவல்துறை இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கு புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் எடியூரப்பாவின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தனர்.

இந்நிலையில், புலனாய்வுத்துறை மீண்டும் அவரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், எடியூரப்பாவோ புலனாய்வுத் துறை விசாரணைக்கு முன்னிலையாவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். மேலும், இந்த வழக்கை ரத்து செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

“எனது மகள் கல்வி தொடர்பாக உதவிகேட்டு முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டிற்கு மகளுடன் சென்றேன். அப்போது எங்களது குறைகளை சில நிமிடங்கள் கேட்ட எடியூரப்பா, பின்னர் எனது மகளை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததார்,” என்று அந்தச் சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.

கடந்த மாதம் புகார் அளித்த சிறுமியின் தாய் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “சிறுமிக்குப் பாலியல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிஎஸ். எடியூரப்பா, போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாம், இதுகுறித்து மாநில புலனாய்வுத்துறை முடிவு செய்யும்,” என்று கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாம் எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில், எடியூரப்பா முன்கூட்டியே பிணை கேட்டு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

குறிப்புச் சொற்கள்