கேங்டாக்: நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இவருடைய மனைவியான கிருஷ்ண குமாரி ராயும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் களமிறக்கப்பட்டார். இதில் அவர், எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்தார்.
இதையடுத்து, ஜூன் 12ஆம் தேதி சட்டசபையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், கிருஷ்ண குமாரி ராய் எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்த நிலையில், கிருஷ்ண குமாரி ராய் ஜூன் 13ஆம் தேதி திடீரென தன்னுடைய எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது. அவரது இந்த திடீர் முடிவுக்கான காரணம் தெரியவில்லை. கிருஷ்ண குமாரி ராயின் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பிரேம் சிங் தமங், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பதவியேற்புக்கு சென்றுள்ள நிலையில், அவரது மனைவி பதவி விலகியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.