நீட் தேர்வு முறைகேடு: பதிலளிக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முறைகேடு: பதிலளிக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

2 mins read
07ba2317-94ac-4c55-be43-7a8add21bdda
புதுடெல்லியில் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கல்வி அமைச்சிற்கு வெளியே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: 2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனிடையே நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கும் மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் அடுத்த விசாரணையின்போது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதோடு இந்த மனுக்களை, ஏற்கெனவே ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நீட் முறைகேடு விவகாரம் தொடர்பான மனுக்களோடு இணைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்