திருச்சி எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டலை கையகப்படுத்த நடவடிக்கை

திருச்சி எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டலை கையகப்படுத்த நடவடிக்கை

2 mins read
57d56448-67b0-43cd-85a7-71f660cb7c23
திருச்சி காஜாமலை பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்எம் ஹோட்டலில் குவிந்த சுற்றுலாத்துறை அதிகாரிகள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் பிரம்மாண்டமான எஸ்ஆர்எம் ஹோட்டல் தமிழக அரசுக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகை ஒப்பந்தத்தில் செயல்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 100 அறைகள், 8 அரங்குகள், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

இந்நிலையில் குத்தகை காலம் 13.6.2024 அன்றுடன் முடிவடைந்தது. அத்துடன் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.40 கோடி தொகை நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து ஹோட்டலை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு 14.6.2024ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஏராளமான காவலர்களுடன் சென்று நெருக்கடி தந்துள்ளனர்.

ஒப்பந்தக் காலம் நிறைவடைந்தும் நிலுவைத் தொகையை செலுத்தும்படி பலமுறை கடிதம் அனுப்பியும் செலுத்தவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் (டிடிசிசி) சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

சந்தை மதிப்பு அடிப்படையில் ஏழு விழுக்காடு ஆண்டுக் குத்தகை தொகை உயர்த்தப்பட்டது. குத்தகை தொகை அதிகரிப்பு தொடர்பாக எஸ்ஆர்எம் குழுமத்துக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கும் இடையே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்று வந்தது. அந்த வழக்கில், நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமென எஸ்ஆர்எம் குழுமத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், குத்தகை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குத்தகை காலம் நிறைவடைந்ததாக வியாழக்கிழமை (13.6.2024) மாலை ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு ஹோட்டல் தரப்பில் இருந்து எவ்விதப் பதிலும் இல்லாததைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக திருச்சி மண்டல இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஹோட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்