தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோய்டா என்கவுன்டர்: 48 மணி நேரத்தில் 8 பேர் கைது

2 mins read
ab781308-4498-4509-aec4-a26594063d9b
காவல்துறையின் நடவடிக்கையின்போது ஒரு லட்ச ரூபாய் பணம், பதிவு எண் பலகை இல்லாத மோட்டார்சைக்கிள் ஒன்று, சட்டவிரோதத் துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: என்டிடிவி

நோய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தின் நோய்தா நகரக் காவல்துறை அதிகாரிகள் தொடர் ‘என்கவுன்டர்’ நடவடிக்கையின்போது 48 மணி நேரத்தில், குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டோரில் ஏழு பேருக்குத் துப்பாக்கிச்சூட்டால் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்டோரில் டெல்லியைச் சேர்ந்த கொள்ளைக்காரரும் அடங்குவார் என்றும் அவர் மீது ஏற்கெனவே 20க்கு மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும் ‘தக்-தக்’ குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

புதன்கிழமை (ஜூன் 12) இரவுக்கும் வியாழக்கிழமை காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் ‘செக்டார்-96’ சாலைச்சந்திப்பில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது முதல் ‘என்கவுன்டர்’ நடந்ததாகக் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.

ஒரே மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த மூவரை விசாரணைக்காக வாகனத்தை நிறுத்தும்படி அதிகாரிகள் கூறினர். மூவரும் தப்பியோட முனையவே காவல்துறையினர் அவர்களைத் துரத்திச் சென்றனர். சந்தேக நபர்கள் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டது.

அதிகாரிகள் பதிலுக்குச் சுட்டதில் சந்தேக நபர்கள் இருவருக்குக் கால்களில் காயமேற்பட்டது. தப்பியோடிய மூன்றாவது ஆடவரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

மூவரிடமிருந்தும் ஒரு லட்ச ரூபாய் பணம், பதிவு எண் பலகை இல்லாத மோட்டார்சைக்கிள், சட்டவிரோதத் துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இரண்டாவது ‘என்கவுன்டர்’ சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது. ‘செக்டார்-15ஏ’யில் அதிகாரிகளை நோக்கிச் சுட்ட ஓர் ஆடவரைக் காலில் சுட்டுக் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த ஆடவர் மீது நோய்தாவிலும் காஸியாபாத்திலும் பல்வேறு கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாகவும் ஏற்கெனவே வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, மூன்று கைப்பேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை நடந்த மூன்றாவது ‘என்கவுன்டர்’ சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் சென்ற இருவரை அதிகாரிகள் விசாரணைக்காக நிறுத்தியபோது சந்தேக நபர்கள் அதிகாரிகளைச் சுட்டுவிட்டுத் தப்பியோட முயன்றதாகக் கூறப்பட்டது. அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், அவற்றுக்கான துப்பாக்கிக்குண்டுகள், ரூ.18,850 ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

நாலாவது ‘என்கவுன்டர்’ சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு குல்ஷன் மால் கடைத்தொகுதியில் நடந்தது. அதிகாரிகள் கூறியும் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் சென்ற ஆடவர்கள் இருவர் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டது. அதிகாரிகள் பதிலுக்குச் சுட்டதில் ஆடவர்களுக்குக் காயமேற்பட்டது. அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்