புதுடெல்லி: டெல்லியில் 245 கிலோ கஞ்சா போதைப்பொருள் சிக்கியதாகவும் அதன் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
கிழக்கு டெல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா கூறுகையில், “சில நாட்களுக்கு முன்னர் ராணுவ வீரர்களின் வீட்டு உபயோகப் பொருள்களுடன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
“டெல்லியில் அதிக அளவில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், காஜிபூர் சப்ஜி மண்டிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்ய ஒரு டிரக் வருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
“நாங்கள் சோதனை நடத்தி டிரக்கில் இருந்து கிட்டத்தட்ட 215 கிலோ கஞ்சாவை மீட்டோம். இந்த வழக்கில் மொத்தம் 245.5 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. டிரக்குடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார்.
முன்னதாக ஜூன் 12 ஆம் தேதி டெல்லி துவாரகா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் வியாபாரி ஒருவரையும் போதைப்பொருள் வாங்கிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், நஜாப்கரில் உள்ள மருத்துவக் கூடத்தின் உரிமையாளரான பிரசாந்த் ஷர்மாவிடம் 98 போதை மாத்திரைகள், புப்ரெனார்ஃபின் மருந்து மற்றும் 8 போதை ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

