புதுடெல்லி: அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் அனைத்துலக சட்டப் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்றும், இந்தியாவின் ஆயுதப் படைகளால் வலுக்கட்டாயமாக அது ஆக்கிரமிக்கப்பட்டது என்றும், இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் சுதந்திரம் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜீலானியும் அருந்ததி ராயும் 2010ல் காஷ்மீரில் நடைபெற்ற மாநாட்டில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த ஆர்வலர் சுஷில் பண்டிட் புகார் அளித்துள்ளார்.
அருந்ததி ராய் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி குறித்தும், பாஜக, இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்து வந்திருக்கிறார். தற்போது மோடி 3.O அரசு அமைந்துள்ள நிலையில் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்கப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
“இந்தியாவில் ‘உபா’ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97 விழுக்காட்டினர் நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர். எனவே, தேவையில்லாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அருந்ததி ராய் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே ஜனநாயகம்” என்று தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

