தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுற்றுலா வேன் ஆற்றில் கவிழ்ந்து 10 பேர் பலி

2 mins read
8f8a159f-0b34-4502-baf5-16063642189e
மீட்கப்பட்ட டெம்போ டிராவலர் வேன். - படம்: இந்திய ஊடகம்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் அடுத்த ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 10 பேர் பலியாகிவிட்டனர்.

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள அலக்நந்தா ஆற்றின் அருகே பெரிய பள்ளத்துக்குள் சனிக்கிழமை (ஜூன் 15) காலை டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது அந்த வேனில் 23 பேர் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன.

இருப்பினும், எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற உறுதியான விவரம் உடனடியாகத் தெரியவில்லை என்று மாநில பேரிடர் மீட்புப் படைத் தலைவர் மாணிகந்த் மிஷ்ரா கூறினார்.

ருத்ரபிரயாக் பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய வாகனம் நொய்டாவிலிருந்து ருத்ரபிரயாக் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஐவர் வழியிலேயே பலியானதாகக் கூறப்படுகிறது.

வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். மாநில பேரிடர் மீட்பப் படையினரும் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தராகண்ட் மாநில முதல்வர் புஸ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளான மிகவும் வேதனையான செய்தி கிடைத்தது. உள்ளூர் நிர்வாகத்தினரும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
வேன்விபத்துமரணம்