தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சித்திரவதை செய்து ரசிகர் கொலை: நடிகர் தர்ஷனுக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம்

2 mins read
1a10a3c2-0bc8-45d6-bc36-a4429d0e600e
நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா. - படங்கள்: தமிழக ஊடகம்

பெங்களூரு: கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், 47, நடிகை பவித்ரா கவுடாவை காதலிப்பதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக பவித்ரா, 34, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், தங்களது உறவு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததாக பதிவிட்டிருந்தார். அதற்கு தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சித்ரதுர்காவைச் சேர்ந்த தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி, 33, தர்ஷனை விட்டு விலகிச் செல்லுமாறும் அவரது குடும்பத்தை சீரழிக்க வேண்டாம் எனவும் ப‌வித்ராவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

இதனால் கோபமடைந்த பவித்ரா, நடிகர் தர்ஷனிடம் அதுபற்றி தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் ரேணுகாசாமி திடீரென்று மாயமானார். பின்னர் பெங்களூரில் உள்ள கால்வாயில் சடலமாக அவர் மீட்கப்பட்டார்.

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடன் தராததால் ரேணுகாசாமியைக் கொன்றதாக 4 பேர் சரணடைந்தனர்.

தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்ததில், ரேணுகாசாமி கொலையில் நடிகர் தர்ஷனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ரேணுகாசாமி கொலையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தர்ஷன் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், அவருடன் இருந்தவர்கள், ‘மர்ம உறுப்பில் தர்ஷன் தாக்கியதால் தான் ரேணுகாசாமி இறந்தார்’ என்று கூறியுள்ளனர். இதனால், தர்ஷனுக்கு எதிரான ஆதாரங்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.

ஒரு கும்பல் ரேணுகாசாமியை கடத்தி பெங்களூர் அழைத்து வந்து கார் ஷெட்டில் அடைத்து சித்திரவதை செய்து கொன்று உடலை கால்வாயில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை மேலும் இருவர் கைதானார்கள். ஜெதீஷ் என்னும் ஆட்டோ ஓட்டுநரும் அனுகுமார் ஆகியோர் அவ்விருவர். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் இதுவரை 16 பேர் சிக்கியுள்ளனர்.

கொலையை மறைக்க பவன் என்பவருக்கு தர்ஷனும் பவித்ராவும் ரூ.30 லட்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியதாக காவல்துறை தெரிவித்தது.

இதற்கிடையே, ரேணுகாசாமியின் தலையை வாகனத்தின் மீது இடித்துள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

மொத்தம் 15 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் பெல்ட் உள்ளிட்டவற்றால் தாக்கியதற்கான அடையாளம் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்