ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு ஹைதராபாத்தில் உள்ளது. இந்த வீட்டின் முன்பகுதியில் உள்ள மூன்று அறைகள் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறியதை அடுத்து, ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்தனர்.
அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி விலகினார்.
இதைத்தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராகவும் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷுக்கு தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெகன்மோகனுக்குச் சொந்தமான வீடு தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் லோட்டஸ் பாண்ட்டில் உள்ளது. இந்த வீட்டுடன் சட்டவிரோதமாக நடைபாதையை ஆக்கிரமித்து பாதுகாப்பு ஊழியர்களுக்காக 30க்கு 20 என்ற அளவில் மூன்று அறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோதக் கட்டுமானங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக பொது மக்கள் புகார் கூறியதை அடுத்து, புல்டோசர் மூலம் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன்புறத்தில் இருந்த சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் பணியில் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.