இணையம் வழி வாங்கிய ஐஸ்கிரீமில் பூரான்: அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்

இணையம் வழி வாங்கிய ஐஸ்கிரீமில் பூரான்: அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்

படம்: என்டிடிவி ஊடகம்

16 Jun 2024 - 5:54 pm

2 mins read

நொய்டா: தனது ஐந்து வயது மகனுக்கு ஊட்டுவதற்காக மாம்பழத்தால் ஆன உணவு ஒன்றைத் தயாரிக்க தீபாதேவி விரும்பினார். அதற்காக அமுல் ஐஸ்கிரீமை இணையம் வழி வாங்கினார்.

ஐஸ் கிரீம் டப்பாவைத் திறந்தபோது அதில் அதிர்ச்சியூட்டும் விதத்தில் பூரான் ஒன்று உறைந்து கிடந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12ல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதனைக் காணொளியாக வெளியிட்டுள்ள தீபா, உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தனது கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இ-காமர்ஸ் தளமான பிளிங்கிட்டில் தீபா புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஸ்கிரீமின் ரூ.195 விலையைப் பிளிங்கிட் அவருக்கு திருப்பிக்கொடுத்தது.

இது புதிதாக நடந்த சம்பவம் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு, மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஆர்லெம் பிராண்டன் செர்ராவ் என்பவர் இணையம் வழி வாங்கிய ஐஸ்கிரீம் கூம்பை கடித்தபோது இதைவிடவும் பெரிய அதிர்ச்சியை அவர் அனுபவித்தார். அதில் மனித விரல் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

“நான் ஒரு பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீமை பாதியளவு சாப்பிட்டதும் வாயில் திடமான துண்டு தென்பட்டது. அது ஏதாவது பருப்புகள் அல்லது சாக்லேட் துண்டுகளாக இருக்கலாம் என நினைத்தேன். அது என்ன என்பதைச் சரிபார்க்க அதைத் துப்பினேன்,” என்று டாக்டர் செராவ் கூறினார்.

“நான் ஒரு மருத்துவர் என்பதால், உடல் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதை கவனமாகப் பரிசோதித்தபோது, ​​அதனடியில் உள்ள நகங்கள், கைரேகை பதிவுகளை நான் கவனித்தேன். அது கட்டைவிரலைப் போல இருந்ததால் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனம் மீது உணவு கலப்படம், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக வழக்குப் பதிவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
உணவுவாடிக்கையாளர்இணையம்