அகமதாபாத்: குஜராத் நீட் தேர்வு மையத்தில், காசோலைகளைப் பெற்றுக்கொண்டு 27 மாணவர்களுக்கு தேர்வு எழுதிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இந்த ஐவரில் தேர்வு மையமாக இயங்கிய பள்ளியின் முதல்வர் புருஷோத்தம் ஷர்மாவும் ஒருவராவார்.
கைதான ஐந்து பேரிடம் இருந்தும் ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோத்ரா காவல் ஆய்வாளர் ஹிமான்ஷு சோலங்கி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோல், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது.
நீட் தேர்வு நடைபெற்ற சமயத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால், இதனை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.
இந்நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்தில் வெளிவந்த நீட் தேர்வு முடிவுகளில், ஹரியானா மாநிலத்தின் ஒரே மையத்தில் படித்த ஆறு பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும் அவர்களுக்கு 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமையும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தன. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், குஜராத் மாநிலம், கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 27 பேருக்கு அவர்களது தேர்வுத் தாள்களில் பதில் எழுதித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.10 லட்சம் தரவேண்டும் என பேரம் பேசியுள்ளனர்.
மேலும், அதற்காக ரூ.2.30 கோடிக்கான காசோலை கைமாறியதாகவும் கோத்ரா மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விசாரணை நடத்த கோத்ரா காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விசாரணையில் இந்த முறைகேடுகள் அனைத்தும் அம்பலமானது.